மக்களவைத் தேர்தல் காரணமாக பணம் கொண்டு செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. வெள்ளிக்கிழமை வங்கிகளுக்கு ரூ. 35 லட்சம் கொண்டு சென்ற வாகனங்களை பறக்கும்படை அதிகாரிகள் பல மணி நேர சோதனைக்கு பிறகு விடுவித்தனர்.
திருநெல்வேலியில் உள்ள வங்கிகளின் தலைமையகத்தில் இருந்து மாவட்டத்தில் பிற பகுதிகளில் இயங்கும் வங்கிக் கிளைகளுக்கு தேவையான பணத்தை பணியாளர்கள் தேவையை பொறுத்து தினமும் எடுத்து செல்வது வழக்கம். வங்கிக் கிளைக்கு குறைந்தபட்சம் ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சம் வரை வாகனங்களில் கொண்டு செல்கின்றனர்.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகளை அமலில் இருப்பதால், பறக்கும்படை அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்த பிறகு செல்ல அனுமதிக்கப்படுகிறது. இந்த சோதனை காரணமாக வங்கிகளுக்கு பணம் எடுத்து செல்வதில் தாமதம் ஏற்படுவதாகவும், வங்கியாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது என புகார் எழுந்துள்ளது.
புதன்கிழமை திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி கனரா வங்கி கிளைக்கு ரூ. 20 லட்சம் கொண்டு செல்லப்பட்டது. திருநெல்வேலி அருகே கருங்குளத்தில் பறக்கும்படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்களை காட்டிய பிறகும் அதிகாரிகள் அந்த வாகனத்தை விடுவிக்கவில்லை.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து 3 மணி நேர சோதனைக்கு பிறகு பணத்தை கொண்டு செல்ல அனுமதித்தனராம். இதனால் வங்கிக்கு உரிய நேரத்தை பணத்தை எடுத்து சென்று வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியவில்லை என வங்கி பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சியில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்கு ரூ. 15 லட்சமும், கனரா வங்கி கிளைக்கு ரூ. 20 லட்சமும் கொண்டு சென்ற வாகனங்களை பறக்கும்படை அதிகாரிகள் மேலப்பாளையம் அருகே கருங்குளத்தில் சோதனையிட்டனர்.
சோதனையின்போது, பணம் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்களை காட்டிய போதிலும் வாகனங்களை அதிகாரிகள் விடுவிக்கவில்லையாம். இது குறித்து வங்கியின் உயர் அதிகாரிகள் தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகளிடம் பேசியபிறகு வாகனங்கள் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வங்கிக் கிளைளுக்கு தேவையான பணத்தை உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லும் வாகனங்களை பறக்கும்படை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் பல மணி நேரம் தாமதப்படுத்துவதால் வங்கியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுவதாக புகார் எழுந்துள்ளது.